நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டு இருந்த மனிதன், இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கிய பின்(டார்வினின் கோட்பாடு பொய்யாகாது என நம்புவோமாக) பூமியின் முகமும் மாறத் தொடங்கிற்று. சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் சுழலத் தொடங்கிய இந்த பரிணாமக் கடிகாரம், 4 மில்லியன் வருடங்களுக்கு முன் வேகம் பெற்றது. அப்போது தான் பூமியில் முதன் முதலாக மனிதனின் மூதாதையர்கள் (ஆப்பிரிக்காவிலோ அல்லது அமெரிக்காவிலோ) நடமாடத் தொடங்கினர். தற்போதைய மனிதனும் அன்றிலிருந்து தான் உருப்பெறத் தொடங்கினான். ஆரம்ப காலத்தில் சிறு சிறு குழுக்களாய், நாடோடியாய், மிருகங்களை வேட்டை ஆடிக் கொண்டும், பழங்களைப் பறித்தும், கிழங்குகளைத் தோண்டிக் கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தவன், ஆற்றுப்படுகைகளில் ஆற அமர பழகிக் கொண்டிருந்தான்.
குழுக்கள் நாகரிகங்களாய் உருப்பெற்றன. நாகரிகங்கள் பண்பாடுகளாயும், பண்பாடுகள் இனங்களாயும், இனங்கள் நாடுகளாயும் மாறத் தொடங்கின (மாற்றம் தானே மானிடத் தத்துவம்). ஆற்றுப்படுகைகளில் வளமான விளைநிலங்களைக் கண்டவன் மெல்ல மெல்ல குடியேறத் தொடங்கினான். இப்படிக் குடியேறியவர்களே பிற்கால நவீன சமுதாயக் கட்டமைப்புக்கு (அட நாம தாங்க அது) வித்திட்டவர்கள் ஆனார்கள். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் எகிப்தியர்கள் (நைல் நாகரிகம் - நைல் நதி - கி.மு.5000), சுமேரியர்கள் (மெசபடோமிய நாகரிகம் - டைக்ரிஸ், யுப்ரேடஸ் நதிகள் - கி.மு.3500), சிந்தியர்கள் (சிந்து/சரஸ்வதி நாகரிகம் - சிந்து, சரஸ்வதி நதிகள் - கி.மு.2500), சீனர்கள் (மஞ்சள் ஆறு, யாங்க்ட்சே, மேற்கு நதிகள் - கி.மு.1500), மேலும் மினோவர்கள், மைசீனியர்கள், ஜெரிக்கோ நதிக்கரைத் துருக்கியர்கள் மற்றும் பலர் ஆவர்.
இப்படி ஆற்றங்கரையிலே ஆவாகனம் புரிய ஆரம்பித்து இப்போது ஆறு பில்லியன் முகங்களாக கிராம-நகர நாடுகளாய், தேசங்களாய், கண்டங்களாய்ப் பல்கி, இன்னும் பெருகிக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஆதாரம்?!... நீர்!
மனிதன் மட்டுமல்லாது அனைத்துலக உயிர்களுக்கும் அதாரமாய் விளங்கும் ஒரே வஸ்து, நீர் மட்டுமே. நீரானது உயிர்கட்கு இன்றியமையாதது. பூமியின் பரப்பின் 70 விழுக்காடு நீரினால் சூழப்பட்டுள்ளது. நாம் உண்ணும், பார்க்கும் காய்/கனிகளின் கூறு 80 விழுக்காடு நீரைக் கொண்டுள்ளது. நமது உடல் 50 முதல் 70 பாகம் வரை நீரினால் ஆனது. ஒரு வாரத்தில் நாம் சராசரியாக 3 வாளி தண்ணீரை இழக்கிறோம்(நாள் ஒன்றுக்கு 2.5 லிட்டர்கள் வீதம்). அதில் 65 பங்கு கழிவுகளாகவும், 20 பங்கு தோல் சுரப்பிகள் மூலமாகவும், 15 பங்கு நுரையீரல் மூலமாகவும் வெளியேறுகிறது. நீரை உட்கொள்வது - வாழும் முறை, வயது, பாலினம், உடல் வளர்ச்சி, உறைவிடம், சீதோசனம், தட்பவெப்பம் என பல காரணிகளால் மாறுபடுகிறது. உதாரணமாக வெப்ப பகுதியில் வாழும் ஒருவர் நாளொன்றிற்கு 10 லிட்டர் நீரை உட்கொள்கிறார், அதே சமயம் பனிசூழ் பகுதியில் வாழும் ஒருவர் நாளொன்றிற்கு 1/2 லிட்டருக்கும் குறைவாகவே உட்கொள்கிறார். எது எப்படியாயினும், நாம் யார், எங்கிருக்கிறோம், எங்கிருந்து வந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம், என்பதை எல்லாம் விட, நாம் நீரை எவ்விதம் உட்கொள்கிறோம் என்பதையும் விட, நம் வாழ்வின் ஆதாரம் - நீர் தான். வாழ்வின் வளர்ச்சிக்கும், சுழற்சிக்கும் நீர் இன்றியமையாதது ஆகி விடுகிறது.
உயிரின் பயணம் பூமியிலிருந்து தோன்றியது என்பதை விட, நீரினின்று தொடங்கியது என்பதே உண்மை. உயிரின் பயணத்தை நாம் பின்னோக்கிப் பார்ப்பதை விட நீரின் பயணத்தையே பின்நோக்கி பார்க்க வேண்டும். நீர் மற்றும் உயிரின் கதை மர்மங்கள் நிறைந்ததும் சுவாரசியம் நிறைந்ததும் ஆகும் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
இனி.. நீரின் கதை..
1] நட்சத்திரத் துகள்களிலிருந்து உருவான பூமி முதலில் நெருப்புக் குழம்பாக கொதித்துக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் தான் பல்வேறு வகையான தனிமங்கள் உருவாயின. அவற்றுள் ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் அடக்கம். கொதி நொதியில் இணைந்த அவை, கொஞ்சம் கொஞ்சமாக திடமாகிக் கொண்டிருந்த பூமியினின்று, நீராவியாக எரிமலைகளின் வெடிப்பினின்று வெளிப்பட்டு காற்று மண்டலத்தில் கலந்து பரவின. இந்நீராவிகள் ஒன்று கூடி மேகமாகி, பின் பூமியின் மீதே மழையாய்ப் பொழிந்தன. இந்த மழை நீர் பூமியின் பரப்பை எட்டும் முன்னமேயே நீராவி ஆகி விடும் (அப்போது பூமியின் பரப்பு வெப்பம் 600 டிகிரி செல்சியசுக்கும் மேல்). இப்படியாக சுழன்று சுழன்று, பூமியின் பரப்பு வெப்பம் 100 டிகிரி செல்சியசுக்கும் (நீரின் கொதிநிலை வெப்பம்) குறைவாக மாறும் வரை பொறுத்திருந்து, முதல் நீர்த்துளி மண்ணைச் சுவைத்தது. இதற்கு அந்த நீர்த்துளி எடுத்துக் கொண்ட கால அவகாசம் - ரொம்ப அதிகமில்லை, சும்மா ஒரு சில கோடி வருடங்களே. இப்படியாக மழையாக விழுந்த நீர், பூமியை மேலும் குளிரச்செய்து, பூமிப்பரப்பில் குடிகொண்டு கடலாக, சமுத்திரமாக உருக்கொண்டது. இதற்கு மேலும் பல கோடி வருடங்களை எடுத்துக் கொண்டது. அப்புறம் மின்னலின் துணை கொண்டு முதல் புரதக்கூட்டு (protein combination), அப்புறம் அமினோ அமிலம், மெல்ல மெல்ல ஒரு செல் உயிரி, இரு செல், பல செல் உயிரி, பின் ஆழ் கடலை விட்டு வெளியே வந்து முதல் சூரிய நமஸ்காரம், பின் கரை வழியே ஊர்ந்து, நடந்து, பறந்து, நின்று இப்படி எத்தனை எத்தனையோ வடிவங்களில் - உயிர்!!
2] பூமியின் தோற்றத்திற்குப்பின் அதில் நீர் தென்படுவதற்குரிய அறிகுறிகள் இருந்தாலும், அந்நீர் தனிமங்களுடன் ஒன்றறக் கலந்திருந்தன. அவற்றிலிருந்து நீரை பிரிப்பதற்கு வெளியே இருந்து ஏதாவது ஒன்று உதவி இருக்க வேண்டும். வெளியே இருந்து என்றால்.. எங்கிருந்து?!.. ஆகாய மார்க்கமாகவா!!.. வானத்திலிருந்து வந்த அந்த உதவி எது?!.. - வால் நட்சத்திரங்கள்!!. வால் நட்சத்திரங்கள், நடமாடும் தொல்லுயிர்ப்படிவங்கள். தமக்குள் உரைநீரைக் கொண்டிருக்கும் (ஒரு வால் நட்சத்திரத்தின் பரப்பில் குறைந்தபட்சம் 60-70 சதவீதம் உறைந்த நீர் காணப்படும்). வால் நட்சத்திரங்கள் சுதந்திரமாக இலக்கின்றிப் பயணிப்பதாய் தென்பட்டாலும், அவை தனக்கென்ற ஒரு குறிப்பிட்ட நீள்வட்ட சுற்றுப் பாதையில் தான் பயணப்படும். இப்படி பயணப்படும் போது, பெரிய நட்சத்திரங்கள் அல்லது கோள்களின் ஈர்ப்பில் பாதிக்கப்பட்டு சமயங்களில் பாதை மாறி அக்கோள்களின் மீது மோதுவதும் உண்டு. இவ்வாறு முன்னெப்பேயோ மோதிய வால் நட்சத்திரங்களின் மூலமே நீர் பூமிக்கு வந்திருக்கலாம். வால் நட்சத்திரங்களின் தனிமங்கள் உயிர் உருவாகுவதற்கு ஏதுவானதாகவே இருந்திருக்கின்றன. ஆகையால் உயிரும் அத்தகைய ஒரு மோதலில் தான் கருக்கொண்டிருக்க வேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து (இப்போதைய நவீன பூமியில் உள்ள நீரில் 10 சதவீத நீர் வால் நட்சத்திரங்களின் மூலம் வந்தவையே என உறுதிப் படுத்தப்பட்டுள்ளது - Deuterium levels in sea water). வால் நட்சத்திரங்கள் தவிர்த்து விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் (asteroids, meteorites) சுற்றிக்கொண்டிருக்கின்றன, அவைகளும் நீரை சுமப்பதில் வால் நட்சத்திரங்களுக்கு சளைத்தவைகள் அல்ல. அவைகளும் பூமியின் மீது மோதி நீரோட்டத்தை தூண்டி இருந்திருக்கலாம். நிலவின் முகப்பருக்களுக்கு மூல காரணம் இந்த விண்கற்களின் கைங்கர்யம் தான் என்பது கவனிக்கத் தக்கது (நிலவின் ஈர்ப்பு விசை குறைவாக இருந்ததால் அதனால் தன்மேல் விழுந்த நீரை காப்பாற்ற முடியாமல் வளி மண்டலத்திற்கு தாரை வார்த்து விட்டதாகக் கூறுவார். தற்போது நிலவின் முதுகில் நீருக்கான அறிகுறிகள் தென்படுவதாக நமது சந்திரயான் கூறுகிறது, அதையும் பொறுத்திருந்து பார்ப்போம்).
3] புவி ஓட்டில் உள்ள நீர்ச் சுவடு உள்ள தனிமங்களினின்று (actinolite, borax, gypsum, epsomite. serpentine, tremolite போன்றவை) கோடிக்கணக்கான ஆண்டுளாய் நீரானது, தட்ப-வெப்ப-கால-சூழல் மாறுதல்கள் மூலம், கொஞ்சம் கொஞ்சமாய் கசிந்து வெளியேறியது என்றும் ஒரு சாரார் கூறுவார்.
4] பூமிக்கு அடியிலுள்ள அனற்குழம்பு புவி ஓட்டைகள் மூலம் புவி ஓட்டுக்கு சற்று கீழே வரும் போழ்து, அவை குளிரும். அப்போது அவற்றில் உள்ள நீர் மற்ற தனிமங்களினின்று தனியே பிரியும். இது மெல்ல மெல்ல புவிப் பரப்பை வந்தடையும். (இதை தான் நாம் நிலத்தடி நீர் என்று சொல்லி கிணறுகள் தோண்டியும், ஆழ்துளைக் குழாய்கள் போட்டும் உறிஞ்சிக் கொண்டிருக்கிறோம்).
இப்படிப் பலதரப்பட்ட கதைகள் நீரைக் குறித்து கூறப்பட்டாலும், இது தான் உலகத்தில் நீர் உருவாவதற்கான உண்மையான காரணம் என்று யாராலும், எதையும் அறுதியிட்டுக் கூற இயலவில்லை.
புவிப்பரப்பின் மூன்றின் இரண்டு பங்கை நீர் குத்தகைக்கு எடுத்திருந்தாலும், அதில் 80 பங்கானது சுத்தமான உப்பு நீர், மீதமுள்ள 20 பங்கே குடிப்பதற்குரிய நன்னீர். அந்த இருபது பங்கிலும் 19 பங்கு (மொத்த நீரிலிருந்து) பூமிக்கு அடியே பாறைகளுக்குள் ஒளிந்துள்ளது, 1 பங்கு துருவங்களில் அடர்பனியாக அமர்ந்துள்ளது. மீதமுள்ள 0.002 பங்கு நீர் தான் நன்னீராய் ஆறுகளிலும், குளங்களிலும், ஏரிகளிலும் ஓடிக்கொண்டும், நின்றுகொண்டும் இருக்கின்றன. கடைசியாக ஒரு 0.0008 பங்கு அத்துவானத்தில் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. ஆக, நாம் மேற்சொன்ன மனித இனமும், மற்றை ஏனைய நன்நீர்வாழ் உயிர்களும் இந்த 0.002 பங்கு நீரையே பருகி பெருகிக் கொண்டிருக்கிறோம். இது இன்னும் எத்துணை நாட்களுக்கு என்பது தான் தற்போதைய கேள்வி!
ஒருகாலத்தில் எல்லா இடத்திலும் குறைவற நர்த்தனமாடிய நீர் இப்போது ஒரு சாராருக்கு மட்டுமே என்ற அவல நிலை வேர்விடத் தொடங்கிவிட்ட கால நிலையில் காலடி எடுத்து வைத்துள்ளோம். இருபது வருடங்களுக்கு முன்பு, எப்போது பாட்டில்களில் நீரை அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தோமோ, அப்பொழுதே அழிவுப்பதையின் பூட்டுகளைத் திறந்து அதில் பயணப்படத் தொடங்கிவிட்டோம். இனி வரும் காலத்தில், இன்னும் 10-15 வருடங்களுக்குள்ளாகவே 1 லிட்டர் குடிநீரின் விலை, 1 லிட்டர் பெட்ரோலின் விலையை விட அதிகமாகி விடும் நிலை இருப்பது, தற்போது உங்களில் அனைவருக்கும் அவ்வளவாய்த் தெரிந்திருக்க வேண்டிய வாய்ப்பில்லை. இப்பொழுதே உலகின் மக்கட் தொகையில் குறைந்தது 30-35 சதவிகித மக்கள் முறையான குடிநீர் இன்றித் தவிப்பதும் தங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான். கவலைப்பட வேண்டாம் கூடிய சீக்கிரம் நாமும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு விடுவோம்.
நீரின் இன்றியமையாமைக்கு இதோ ஒரு சின்ன உதாரணம். இமயம் தோன்றி வங்கம் சேரும் கங்கை நதியை தினமும் 40 கோடிப் பேர் ஏதாவதொரு வகையில் தொடர்புடையவராகவோ, சார்ந்தவராகவோ இருக்கின்றனர். இப்படி உலகம் முழுவதும் உள்ள பெரு நதிகளை நம்பி பலகோடி உயிரினங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கங்கை நதி சமீப காலங்களாய் வற்றிக் கொண்டிருக்கிறது என்று இரண்டு மாதங்களுக்கு முன் நாளிதழ்களில் பெட்டிச் செய்தியாக வந்ததாக ஞாபகம். இப்பொழுது வற்றாத(?!) ஜீவநதிகள் யாவும் ஒவ்வொன்றாய் மிக மெதுவாய் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதுவும் கண்கூடாகத் தெரிந்து கொண்டிருக்கிற உண்மை. இதற்கெல்லாம் யார் காரணம்?!.. இவை எல்லாம் ஏன் நிகழ்கின்றன?!.. ஒவ்வொரு உயிரினத்திற்கும் பிறப்புரிமையான நீர் இப்பொழுது ஏன் ஒரு வியாபாரப் பொருள் ஆகி விட்டது?!..
விடை காண நீருடன் சேர்ந்து நாமும் பயணிப்போம்..
நீரின்றி அமையாது உலகு..
Comments
Post a Comment