அறிவியல்ல இருந்து ஆரம்பிப்போமே..
ஈக்யூனாக்ஸ் (Equinox) அப்புடீன்றது ஒரு வருசத்துக்கு ரெண்டு தடவ வரும். ஈக்யூனாக்ஸ்'ஆ அப்புடினா?!.. அது ஒரு நிகழ்வு. அதாவது பூமியின் மத்திய தரை ரேகையும் (Equator) சூரியனோட மையமும் ஒரே நேர் கோட்டுல வந்து நிக்கும். உங்க உச்சி மண்டைக்கு நேரா சூரியன் நின்னா எப்படி இருக்கும், அந்த நிகழ்வுக்கு பேரு தான் ஈக்யூனாக்ஸ். அன்னிக்கு இரவும் பகலும் சரி சமமா இருக்கும், அதாவது இரவு மற்றும் பகலின் கால அளவு ஒரே அளவுல இருக்கும். இது ஒவ்வொரு வருஷமும் மார்ச் திங்கள் 20/21 மற்றும் செப்டெம்பர் திங்கள் 20/21 தேதிகள்ல நடக்கும். சரி, இதை எதுக்கு இப்போ இவன் சொல்லிட்டு இருக்கான்னு பாக்குறீங்களா..
அய்யா.. என்னிக்கு மனுஷன் விவசாயம் செய்ய ஆரம்பிச்சானோ அன்னிக்கு இருந்து அவன் உன்னிப்பா கவனிக்க ஆரம்பிச்ச ஒரே விஷயம் வானம். மனிதனின் தேடுதல்களுக்கான விடைகள் அனைத்தையும் அவன் வானத்தில் இருந்தே பெற்றுக் கொண்டான். அது வாழும் முறைமை ஆகட்டும், ஆன்மிகம் ஆகட்டும், அறிவியல் ஆகட்டும், அவனுடைய தேடல்களும் கேள்விகளும் மேல் நோக்கியே சென்றன. வானம் (விண்வெளி'னு அறிவியல் பெரியவா சொல்லுவா) தனக்குள் அனைத்து ரகசியங்களையும் கட்டி காத்துள்ளது. அதுல இருந்து எவ்ளோ தான் விஷயங்கள நாம கறந்தாலும் இன்னும் கறக்க வேண்டியன எவ்வளவெவ்வளவோ! அது நம்ம பூமியின் வாழ் நாள் பூராவும் முடியாத விஷயம். சரி, மேட்டருக்கு வருவோம்.. விவசாயம் பண்ணனும்னா காலங்களை பத்தி நல்லா தெரிஞ்சுருக்கணும். காலங்களின் சுழற்சிக்கு காரணகர்த்தா யாரு?! நம்ம சூரியன் தான். சபாஷ்! கரீகிட்டா சொல்லீட்டீங்க!
அதனாலயே மனிதனின் கால அளவு நிர்ணயங்கள் சூரியனைச் சுற்றியே வகுக்கப்பட்டன. இரவும் பகலும் சரி சமானமாக இருக்கும் அந்த நாளை ஒட்டியே ஒவ்வொரு பண்டைய நாகரிகமும் தனது நாட்களை கணக்கிட்டன. எகிப்து, சீனம், அரபு, மெசபடோமியா, பாரசீகம், துருக்கி, யூதர்கள், வங்காளம், சமஸ்கிருதம், மாயர்கள், போன்ற தொன்மை நாகரீகங்கள் இந்த நாளைக் கணக்கில் கொண்டே தமது வருட முதல் நாளை நிர்ணயித்தன. அவ்வளவு ஏன், பிற்காலத்தில் வந்த கிறித்தவர்கள் கூட இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்ட்டர் ஞாயிறை மார்ச் திங்கள் 21 ஆம் தேதிக்கு அடுத்து வரும் முதல் ஞாயிற்று கிழமையில் வகுத்தனர். அதைத்தான் நம் பண்டைய தமிழர்களும் செய்திருந்தனர் (கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் குடி அன்றோ!)
அப்போ செப்டம்பர் 21அ கணக்குல வெச்சு நாள்காட்டி'ய அமைச்சுருக்கலாமே, அதுவும் ஒரு நேர்த்தியான நாள் (perfect day) தானே! அப்புடீன்னு நீங்க கேக்கலாம். உண்மை தான், ஆனா செப்டம்பர் மாசம் குளிர் காலத்துல வருதே, சூரியனை மையமா வெச்சு அமைக்கபடுற கால அளவில சூரியனோட சக்தி தெரியாம இருந்தா எப்புடி இருக்கும்?!.. தவிர மார்ச் மாசம் அறுவடை எல்லாம் முடிஞ்சுருக்கும், விளைஞ்சத வித்துட்டு, பாவம் அவன் ஏப்ரல்ல தான் கொஞ்சம் செழுமையா இருப்பான். விவசாயம் ஆரம்பிச்ச காலம் முதற்கொண்டே இதுதான் காலகாலமா நடந்துட்டு வர்றது (நம்ம காலச் சுழற்சி அப்படிங்க). கைல காசிருக்கும் போது தான கொண்டாட தோணும், புதுசு வாங்கணும், புதுப்புது முயற்சிகள்ல ஈடுபடணும், சுபகாரியங்களை செய்யணும். அப்போ, அந்த மாறி ஒரு கால கட்டத்துல தானே புது வருடத்த தொடங்கணும். இதை கருத்தில் கொண்டே பண்டைக் காலம் முதல் மார்ச் 21 ஆம் தேதியைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு இனமும் தனது காலக்காட்டியை (அதாங்க நம்ம calender) வகுத்தன.
தமிழர்கள் பின்பற்றியது 'திருக்கணிதப் பஞ்சாங்கம்'. இதுவும் சூரிய சித்தாந்தமும் சம காலத்தவை. சூரிய சித்தாந்தத்தின் சாரமே திருக்கணிதப் பஞ்சாங்கம். இந்தப் பஞ்சாங்கம் சுமார் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை கூட கணித்து தம்முள் பதிவு செய்திருக்கிறது. அதாவது பூமியில் பாறைப் படிவங்கள் தோன்ற ஆரம்பித்த காலம். (இப்போ புரியுதா ஏன் 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி..'னு). மனிதம் தோன்றுவதற்கு 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலங்கள் கூட இதில் கணிக்கப் பட்டிருக்கின்றன.
நமது தமிழ் பஞ்சாங்கம் 'சூரிய சித்தாந்த'த்தை அடிப்படையாகக் கொண்டது.
சூரிய சித்தாந்தமானது இந்தியாவின் தொன்மையான வானவியல் சாஸ்திர நூலாகும். குப்தர்கள் காலத்தில் இருந்து அரசாணையின் படி (இது நம்ம தமிழ்நாட்டு அரசாணை மாறி இல்லைங்க) இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதற்கு முன்னமே புத்த மதத்திலும் பின்பற்றப்பட்டது (சுமார் கி.மு.300 ஆம் நூற்றாண்டில் இருந்தே) இந்த சூரிய சித்தாந்தமே அனைத்து வானவியல் அறிவியல் படைப்புகளுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. சூரிய சித்தாந்தத்தின்படி ஒரு சராசரி வருடத்திற்கு 365.2421756 நாட்கள், இது தற்போதைய நவீன கணக்கின் படியான 365.2421904 நாட்களை விட 1.4 வினாடிகளே குறைவானதாகும். அவ்வளவு துல்லியமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னதாகவே எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாமலேயே கணக்கிட்டிருப்பது சூரிய சித்தாந்தத்தில் மட்டும் தான். தற்போது பயன்பாட்டில் இருக்கும் கிரகோரியன் நாள்காட்டியில் கூட இந்த அளவுக்கு நேர்த்தியோ துல்லியமோ கிடையாது. எந்த நாகரிகமும் இந்த அளவிற்க்கு காலத்தை கணக்கிட்டதும் கிடையாது.மேலும் கோளங்களின் அளவுகள், சுழற்சி முறைகள், சுழற்சி காலங்கள், நட்சத்திரங்களின் நிலை, திசை, அசைவுகள், சந்திர/சூரிய கிரகணங்கள் என அனைத்தையும் இதில் சரியாகவே கணக்கிட்டு இருக்கிறார்கள். (மகாபாரதத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் அம்மாவாசை வருமே! அதுவும் இதில் இருந்தே எடுத்தாளப் பெற்றது. அந்த இரண்டு அம்மாவாசை நிகழ்வு உண்மை தான் என்று இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.)சூரிய சித்தாந்தம் துல்லியமானது என இன்றைய அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சூரிய சித்தாந்தத்தின் காலக் கணக்கானது..
பிராணம் என்பதே உண்மை. 6 ப்ராணங்கள் சேர்ந்தது ஒரு நொடி. 60 நொடிகள் சேர்ந்தது ஒரு நாடி. 60 நாடிகள் சேர்ந்தது ஒரு இரவு அல்லது ஒரு பகல். ஒரு இரவும் பகலும் சேர்ந்து ஒரு நாள். இது போன்று 30 நாட்கள் சேர்ந்தது ஒரு மாதம். ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் உள்ளதோ அத்தனை சூரியோதயங்கள் நிகழும். நிலவின் சுழற்சியை கொண்டு கணக்கிடும் மாதம் திதி எனப்படுகிறது. சூரியன் ஒவ்வொரு ராசியிலும் நுழையும் போது ஒரு சூரிய மாதம் பிறக்கிறது. அப்படிப்பட்ட 12 சூரிய மாதங்கள் சேர்ந்தது ஒரு வருடம். 60 வருடங்கள் சேர்ந்தது ஒரு சுழற்சி. இதையே பிற்காலத்தில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வந்த அரபு கணித மேதை ஓமர் கய்யாமும் உறுதி செய்தார். வரஹமிஹிரா, பாஷ்கராச்சார்யா போன்ற இந்திய கணித மாமேதைகளும் இதையே முன் மொழிந்தனர். இன்றளவும் இந்தக் கணக்கு முறையையே உலக மக்கள் பின்பற்றி வருகிறார்கள். என்ன, வெவ்வேறு பெயர்களிலும், வெவ்வேறு மொழிகளிலும். ஆனா சரக்கு ஒண்ணுதான்.
தமிழர்களைப் பொறுத்தவரை வெண் பகலவன் மேச ராசியில் பவனி வரும் சித்திரை மாதம் தான் வருடப்பிறப்பு. அப்புடீன்னு நான் சொல்லலீங்கோ. நெடுநல்வாடைல (3 ஆம் நூற்றாண்டு) நம்ம நக்கீரர் சொல்றாருங்கோ. அப்புறம் நம்ம கூடலூர் கிழாரும் புறநானூறு'ல அதையே சொல்றாருங்க (அதே 3 ஆம் நூற்றாண்டு). அப்புறம் ஒரு 8 ஆம் நூற்றாண்டு போல நம்ம இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்துல அதையே மறு ஒளிபரப்பு செய்றாருங்க. அப்புறம் மணிமேகலை.. (இன்னும் எந்தெந்த நூட்கள்ள சொல்லிருக்காங்கனு தெரிஞ்சுக்கணும்னா கூகுளிட்டுப் பார்க்கவும்).
'தமிழ்நாடு புது வருடச் சட்டம்' சனவரி மாதம் 29 ஆம் நாள் 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் தைத் திங்கள் தமிழ் ஆண்டின் முதல் மாதமாக அனுசரிக்கப் படுமாம். காலண்டர மாத்தலாம், காலச் சுழற்சிய மாத்த முடியுமோ?!.. அப்டி முடியும்னா அந்த வழிமுறையை யாராச்சும் அவங்களுக்கு சொல்லிக் கொடுங்கப்பா.. தமிழ் வருடப் பிறப்பை மாற்றியமைத்தமைக்கு காரணங்களாக எந்த வித தமிழ் இலக்கிய ஆதாரங்களும் இதுவரை எடுத்தாளப் பெற வில்லை. 1921 ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் முன்மொழிந்த ஒரே காரணத்துக்காகவும் (திராவிட சித்தாந்தமாம்) கம்பர், வள்ளுவர், கபிலர், அகத்திய, தொல்காப்பியர் போன்ற பெரியோர்கள் கூறியுள்ளமையாலும் (அதற்கான வரலாற்று இலக்கிய ஆதாரங்களை தமிழ் கூறும் நல்லுலகம் இன்றளவும் தேடிக் கொண்டு தானிருக்கிறது. இன்னும் தேடிக் கொண்டே இருக்கும்..)
திருவள்ளுவர் காலம் கி.மு.31 ஆம் ஆண்டாகக் கூறப்படுகிறது. அதற்கான வரலாற்று/இலக்கிய ஆதாரங்களும் நம்மிடம் இல்லை. திருவள்ளுவரை பற்றி சமகால இலக்கியங்களில் குறிப்பிடப் படவில்லை, அவரும் சமகால புலவர்களைப் பற்றியோ, மன்னர்களைப் பற்றியோ குறிப்பிட்டதில்லை. ஆகையால் அவருடைய காலமும் நமக்குத் தெரியப்படவில்லை. அவர் சமணரை இருப்பாரோ எனும் ஊகம் உண்மை எனில் அவர் காலம் 3 ஆம் (கி.பி) பின்தையதாகவும், 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாகவோ இருக்கலாம். (ஒரு ஊகம் தான் பாசு, அதுவும் உண்மை னு சொல்லிற முடியாது). ஆனால் தமிழறிஞர்கள் யாரும் அவர் கி.மு.31 இல் வாழ்ந்திருப்பார் என்று திட்டவட்டமாக கூறியதில்லை. அப்புறம் எப்படி வள்ளுவர் ஆண்டை அனுசரிச்சு தை மாசத்தை ஆண்டின் முதல் மாசமா கொண்டாட முடியும்?!..
2008 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் அரசுடைமைக் கோவில்களில் பஞ்சாங்கம் படிக்கக் கூடாது என்று தமிழக அரசு வலியுறுத்தியது. அப்படியே செய்தது. அப்போ தை'ல கோவில்கள்ல பஞ்சாங்கம் படிச்சிருக்கலாமே!!.. அதெப்படி முடியும்?!.. புது பஞ்சாங்கம் தான் இல்லையே!.. பஞ்சாங்கத்தை யார் எழுதுறது?!.. அதுக்கு சூரியனோட நடம்மாட்டத்தையில்ல மாத்தி அமைக்கணும். ஒரு வேலை மாத்திருவாங்களோ. நம்மளால முடியாததா என்ன. அந்த சூரியனே நாம தானே!! ஆனா பாருங்க ஏப்ரல் 14 அரசு விடுமுறை, ஏன்னா அன்னிக்கு அண்ணல் அம்பேத்காரின் பொறந்த நாலுள்ள. எப்பூடீ?!.. மத்திய அரசும் மலையாள வருடப் பிறப்பு, வங்காள வருடப் பிறப்பு னு விடுமுறை விட்ருக்காங்க. அட்ரா சக்கை.. அட்ரா சக்கை..
மறுபடியும் 2009 ஆம் ஆண்டு கோவில்களில் சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிக்க அனுமதிக்கப் பட்டிருக்கிறது ( இந்திய அரசியல் சாசனம் ஆர்டிக்கல் எண் 26 இன் பிரகாரம், மற்றும் Hindu Religious and Charitable Endowment Act., 1959 இன் படி). ஏன் இந்த அந்தர் பல்டி?!.. யாருக்கும் இன்றளவிலும் அதற்கான பதில் தெரிய வில்லை.
எது எப்படி ஆயினும், ஆயிரம் ஆயிரம் வருடங்களாக, தமிழ்ப் புத்தாண்டு சித்திரைத் திங்கள் முதல் நாளிலேயே உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கொண்டாடப் படுகிறது. கொண்டாடப் படும். ஆயிரம் சட்டங்களோ, சட்ட திருத்தங்களோ அதை மாற்றி அமைத்து விட இயலாது.
எங்க ஊருல சித்திரை மாசம் வருஷம் பிறக்குறதுனால தான் திருமலை நாயக்கரே பங்குனி மாசம் ஆத்துல இறங்கிட்டு இருந்த அழகர சித்திரை மாசம் இறக்கி விட்டார் (அது ஆயி ஒரு 400 வருசமாச்சுங்க). சித்திரை மாதம் வசந்தத்தின் வாயிற்படி. மா, வேம்பு பூத்துக் குலுங்கும். மக்கள் தோரணம் கட்டி ஆரவாரம் செய்வர். சித்திரை என்றாலே திருவிழா தான். மதுரை பெருந் திருவிழா முதல், திருவாடுதுறை தேர் திருவிழா வரை சித்திரை மாதமே பெரியோர்கள் நிச்சயித்து அனுசரித்து வருகிறார்கள். தமிழர் திருநாளை, புத்தாண்டாகக் கொண்டாடுதல் காலப் பிழையே. காலம் மாறும். தமிழன்னை சித்திரையிலேயே எழுந்தருளுவாள். நாளை பிறக்கும் விக்ருதி ஆண்டு அனைவருக்கும் நல்லதாக அமைய எல்லாம் வல்ல இறையை வேண்டிக் கொள்வோமாக. இறை நம்பிக்கை இலாதோர், அனைவரும் நலம் காண மனதுள் நினைத்தாலே போதுமானது (ஆத்திகம் பேசும் அடியோர்கெல்லாம் சிவமே அன்பாகும்; நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்!!).
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
kalakitinga
ReplyDeleteநன்றி ராஜேஷ்!
ReplyDeletemany times u give a slap on my face and remind me to explore in-depth things.. this is one more such article.. brilliant work..
ReplyDeleteஅருமை... அருமை!
ReplyDeleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!